Monday, January 25, 2010

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 4

இவ்வருட பகல் பத்து உற்சவத்தின் சில சேவைகள்

பாசுரங்கள் இருவகைப்படும் அவை இசைப்பா மற்றும் இயற்பா. இசைப்பா இசையுடன் பாடப்படக்கூடியவை. முதல் மற்றும் இரண்டாம் ஆயிரத் திருமொழிகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்பாசுரங்கள் இசைப்பாவில் அடங்கும். மூன்றாம் ஆயிரம் இயற்பாவில் அடங்கும் இவை இயல்பாக சேவிக்கப்படுவதால் இயற்பா ஆயின.

கீதாச்சார்யனாக சத்ய நாராயணப் பெருமாள்


பார்த்தனும் ஸ்ரீ கிருஷ்ணனும்

கீதோபதேசக் கோலம்



பகல் பத்தின் போது பகலில் அதாவது மத்தியான வேளையில் பெருமாள் முன் முதல் மற்றும் இரண்டாம் நாளில் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழியும், மூன்றாம் நாள் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை, நாச்சியார் திருமொழியும், நான்காம் நாள் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியும், ஐந்தாம் நாள் திருமழிசைப்பிரானின் திருச்சந்த விருத்தம், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான், மதுரகவியாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றது. ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை திருமங்கை மன்னன் நம் கலியனின் பெரிய திருமொழி சேவிக்கப்படுகின்றது. பத்தாம் நாள் நாச்சியார் திருக்கோலத்தில் சாற்றுமறையின் போது ஆலி நாடனின் திருக்குறுந்தாண்டகமும், திருநெடுந்தாண்டகமும் கேட்டருளுகிறார் பெருமாள்.


சத்யநாராயணப் பெருமாள் நாச்சியார் கோலம்

சத்ய நாராயணப் பெருமாள் திருவரங்கத்தில் நம்பெருமாள் அணிவது போலவே கிரீடமும், மாலையும் கிளிகளும் அணிந்து சேவை சாதிப்பதை கண்டீர்களா?

அமரர்களுக்கு அருஞ்சுவை அமுதம் அளிக்க ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்தார் பெருமாள். இரண்டாவது முறை பஸ்மாசுரனிடமிருந்து சிவபெருமானைக் காப்பாற்றவும், மூன்றாம் முறை முரன் என்ற அசுரனை அளிக்கவும் மோகினி அவதாரம் எடுத்தார். இந்த மூன்றாம் முறை எடுத்த அவதாரத்தையே நாம் வைகுண்ட ஏகாதசிக்கு முன் நாள் பகல் பத்தின் நிறை நாள் நாம் விஷ்ணுவாலயங்களில் சேவிக்கின்றோம்.





ஆழ்வார் ஆச்சாரியர்கள்

No comments:

More than a Blog Aggregator