பகல் பத்து உற்சவத்தின் போது
சக்ரவர்த்தி திருமகன் கோலத்தில்
திருமயிலை ஆதிகேசவபெருமாள்
ஆழ்வார்கள் திருமாலாகிய பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் வைணவ சம்பிரதாயத்தில் தென்கலை மரபை தோற்றுவித்தன என்பது ஒரு சாரார் க்ருத்து. திவ்ய பிரபந்தங்கள் உபயவேதாதங்கள் ஆயின. எனவே இவர்கள் திவ்ய சூரிகள் என்றழைக்கப்படுகின்றனர். திவ்ய தேசங்கள், திவ்ய சூரிகள், திவ்ய பிரபந்தங்கள் மூன்றும் திவ்யத்ரயங்கள் ஆயின.
பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது. – திவ்ய பிரபந்தங்கள்.
பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள். - திவ்ய தேசங்கள்
பிரமாதா – உண்மை அறிவுடையோன். – திவ்ய சூரிகளாகிய ஆழ்வார்கள்.
ஆகவேதான் மணவாள மாமுனிகளும் "ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
எனவே வேதமே திவ்யபிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச்செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. அதற்கான அங்கங்களாகின திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள். ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகி திவ்ய பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம்.
ஓம் நம: என்பது முதலாயிரம்.
நாராயணாய என்பது திருமொழி
கீதா சரமசுலோகம் : இயற்பாக்கள்
த்வ்யம் : திருவாய்மொழி
திருப்பல்லாண்டு ஓம் என்ற பிரணவத்தின் விரிவு,
கண்ணி நுண் சிறுதாம்பு நம:
பெரிய திருமொழி நாராயண என்கிற பரம்பொருளின் விளக்கம்.
சரம (இறுதியான) ஸ்லோகம் சரணாகதி என்னுன் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும்.
இவ்வாறு முதலாயிரமும் இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.
அத்யயன உற்சவத்தின் போது அனைத்து ஆழ்வார்களும் ஆச்சாரியர்களுக்கும் அருளப்பாடு ஆகின்றது. இவ்வாறு திருமயிலையில் அருளப்பாடு கண்டருளிய ஆழ்வார்கள் மேலே, ஆச்சாரியர்கள் கீழே.
நம்மாழ்வாரின் திருவாய் மொழியின்
முதல் பத்து : ஸ்ரீமந்
இரண்டாம் பத்து : நாராயண
மூன்றாம் பத்து : சரணௌ
நான்காம் பத்து : சரணம்
ஐந்தாம் பத்து : ப்ரபத்யே
ஆறாம் பத்து : ஸ்ரீமந்
ஏழாம் பத்து : நாராயண
எட்டாம் பத்து : நாராயண
ஒன்பதாம் பத்து : ஆய
பத்தாம் பத்து : நம:
அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப்பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய த்வயமே திருவாய் மொழி.
இவ்வளவு சிறப்புப்பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை பெருமாளின் முன் விண்ணப்பம் செய்யும் உற்சவமே அத்யயன உற்சவம். அத்யயன உற்சவம் என்பதற்கு சிறப்பான உற்சவம் என்ற பொருளும் உண்டு. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை மையமாகக் கொண்டு இருபது நாட்கள் இந்த தமிழுக்கு தகைமை சேர்க்கும் விழா விஷ்ணுவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த இருபது நாட்களிலும் நான்காயிரம் திவ்யப்பிரபந்தகளும் தமிழுக்கு பின் செல்லும் மூவருக்கும் முதலவரான, கரும்புயல் வண்ணன், இன்பப்பா, பச்சைத்தேன், பைம்பொன் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றன.
பகற்பத்து எனப்படும் திருமொழித்திருநாளில் முதல் இரண்டு ஆயிரம் பாசுரங்களும் சேவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு திவ்ய அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் இதை சாத்துபடி என்று அழைக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடைபெறும் இராப்பத்து எனப்படும் திருவாய்மொழித்திருநாளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சேவிக்கப்படுகின்றது. சில திவ்ய தேசங்களில் 21ம் நாள் மூன்றாம் ஆயிரமான இயற்பா முழுவதையும் சேவிப்பது மரபு. இராப்பத்தை நம்கலியன், திருமங்கை மன்னன் திருவரங்கத்தில் தொடங்கினார். பகல் பத்து பின்னர் நாதமுனிகளால் தொடங்கப்பெற்றது.
அப்படியே வேத ஸாம்யம் அநுக்ரஹித்தோம் அத்யயன உஸ்தவத்திலே வேத பாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள் என்று நம்பெருமாள் திருவாய் மலர்ந்தருள மதுர கவியும் திருமங்கை மன்னனும், திருக்குறளப்பன் சன்னதிக்கு நம்மாழ்வாரின் அர்ச்சையுடன் எழுந்தருளி அழகிய மணவாளர் திருமண்டபத்திற்க்கு திருவரங்கன் எழுந்தருள மதுரகவியாக்வார் தேவ கானத்திலே இசையுடன் பாடி அபிநயனத்துடன் திருவாய்மொழி விண்ணப்பம் செய்தார். இது பின்னர் நின்று போனது.
இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை. அரையர் என்றால் அரசன் என்று பொருள். திருவாய் மொழொயினை நிகரற்ற தேர்ச்சி பெற்று விளங்கிய தலைமையை போற்றவே அரையர்கள் என்று திருவரங்கனால் பாராட்டப்பெற்றனர். இத்தலைமை தோற்றவே தலையில் மகுடமாக பட்டுக்குல்லாய் அணிந்து கொள்ளும் உரிமை பெற்றனர். கையில் தாளங்கள் ஏந்தி ஒலித்தனர் இவர்கள் இசைக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர். முத்திரைகளை நன்கு அறிந்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment