Sunday, December 30, 2007

இயற்பா சாற்றுமுறை

ஸ்ரீ:
ஸ்ரீநிவாசர் கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம்


தமிழ் வேதத்தை தனி முதல்வன் முன் சேவிக்கும் அத்யயனோற்சவத்தின் நிறை நாள் முதலாழ்வார்களின் இயற்பா எம்பெருமான் திருமுன் சேவிக்கப்படுகின்றது. முதலாழ்வார்களின் வைபவத்தை இன்று பார்ப்போம். ஒரு நாள் முதலாவார்களாகிய பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் பொய்கையாழ்வார் மூவரும் தனித் தனியே சென்று திருக்கோவலூரில் உள்ள ஓங்கி உலகளந்த உத்தமனை சேவித்தனர். இருள் சூழ்ந்த நேரத்தில் வானம் இருட்டிக் கொண்டு மழை பொழிய, முதலில் பொய்கையார் ம்ருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தின் இடைக்கழியிலே வந்து சேர்ந்தார், பொய்கையார் மட்டுமே கைகால்களை நீட்டிப் படுக்கக் கூடிய மிகக் குறுகலான இடம் அந்த இடைக்கழி. பொய்கையார், கைகால்களை நீட்டிப் படுத்துக் கொண்டார்.

அப்பொழுது, பூதத்தார் மழையில் நனைந்து கொண்டே அந்த வீட்டில் ஒதுங்கினார். உடனே, பொய்கையார் எழுந்து உட்கார்ந்தபடியே 'ஒருவர் படுக்க- இருவர் இருக்கலாம்' என்று பூதத்தாருக்கு இடம் அளித்தார். அப்பொழுது, பேயாழ்வாரும் மழையில் நனைந்து கொண்டே அதே வீட்டில் ஒதுங்கினார். உடனே பொய்கையார் எழுந்து நின்றபடியே ' ஒருவர் படுக்க-இருவர் இருக்க-மூவர் நிற்கலாம் என்று எழுந்து நின்று பேயாழ்வார் நிற்க இடம் தந்தார். பூதத்தாரும் எழுந்து நின்றார். ஒரே இருள் ! கடுமையான மழை! மூவரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆனார்கள். அன்பைக்காட்டினார்கள். நட்பை விதைத்துக் கொண்டார்கள்.

எம்பெருமானின் புகழை, அவரவர்களின் பக்தி சுகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது முவருக்குள்ளும் நான்காவது ஒருவர் நுழைந்து கொண்டு மூவரையும் நெருக்கிக் கொண்டிருப்பது மிக நன்றாக உடல் உரசலாலும் புரிந்தது. உயிர் உணர்ச்சிகளின் தழுவலாலும் புரிந்தது. அந்த மூவுலகையும் மூன்றே அடிகளில் அளந்த மாயவன் இவ்வளவு உலகங்களையும் விட்டு விட்டு , தன் திருக்கோவிலையும் விட்டு விட்டு அந்த பயங்கரமான இருட்டில், கொட்டும் மழையில் தன் அடியார்களின் சங்கமத்தில் தானும் இருக்க வேண்டி, ஆழ்வார்களின் ஸ்பரிசமே தனக்கு மிகவும் பிரியமானது என்று அவர்களிடையே வந்து தோன்றினான். அந்த கும்மிருட்டிலும் நான்காவதாக வந்த எம்பெருமானை பக்தி கண்களால் கண்ட மூவரும் மெய் சிலிர்த்து ஜ“வன் நெகிழ நின்றார்கள். அடியார்களுடன் கூடி நெருக்குப்பட்டதால் எம்பெருமான் "புலவ்ர் நெருக்குகந்த பெருமான் " என்று கொண்டாடப்படுகின்றான். இடைக்கழியிலே சேவை சாதித்ததால் " தேஹளீசன்" என்றும் வழங்கப்படுகின்றான்.

எம்பெருமானின் ஸ்பரிசம் பட்டவுடன் பொய்கையாழ்வார், " இவ்வுலகமே அகல் விளக்கு! ஆழ்கடலெல்லாம் அதில் நெய்! கதிரவனே விளக்கின் திரி! உலக மக்களின் துன்பக்கடல் ஒழியட்டும்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே!



என்று ஆழி வல்லானுக்கு சொல்லால் மாலை சூட்டி எம்பெருமானை அடையும் ஒரு மார்க்கமாகிய தத்துவ விளக்கேற்றினார் . உடனே சிறு ஒளி மட்டும் பிறந்தது. பின் எம்பெருமான் மீது அந்தாதியாக நூறு பாசுரங்கள் பாடியருளினார் பொய்கையார்.

பூதத்தாழ்வார் பக்தியில் மேலும் ஒரு படி சென்று பக்தர்களின் அன்பே அகல் விளக்கு, விருப்பமாகிய ஆசையே நெய், உலகமெல்லாம் இன்பத்தில் திளைக்கட்டும் என்ற சமரச நினைப்பே திரி என்று ஞானத்தமிழால்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று ஞானச்சுடர் விளக்கேற்றினார் பூதத்தார் . உடனே ஒளி பெருகியது. இவரும் நூறு பாசுரங்கள் அந்தாதியாக பாடியருளினார். அங்கே அவர்கள் கண்ட திவ்ய தரிசனத்தை பேயாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்

என்னாழி வண்ணன்பால் இன்று.




என்று தாம் கண்ட எம்பெருமானின் திவ்ய தரிசனத்தை எல்லோரும் அறிந்து இன்புற பாசுரமாக பாடியருளினார் பேயாழ்வார். இவரும் 100 பாசுரங்களை அழகுற அந்தாதியாக பாடியருளினார்.

மூன்று ஆழ்வார்களும் நமக்கு அறிவுறுத்தும் உண்மையாவது தத்துவத்தாலும், ஞானத்தாலும் நாம் எம்பெருமாளை சரணாகதி அடைந்தால் நாம் அந்த ஆழி வல்லானை பெரிய தாயாருடனும், சுடராழியுடனும், திரி சங்கத்துடனும் திவ்ய தரிசனம் பெறலாம் என்பதுதான்.





கடந்த இருபத்திரண்டு நாட்களாக வந்து எம்பெருமானைச் சேவித்து சென்ற் அன்பர்களுக்கு நன்றி ஏதாவது குறையிருந்தால் தெரிவிக்கவும், திருத்திக் கொள்கிறேன். சிறிது நாட்கள் கழித்து மும்மலம் நீக்கும், பரமனடி காட்டும் கருட சேவை தொடர் தொடங்க விழைகின்றேன் அப்போதும் வந்து சேவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

More than a Blog Aggregator