Friday, December 28, 2007

இராப் பத்து பத்தாம் நாள் (நம்மாழ்வார் மோட்சம்)

ஸ்ரீ:




ஸ்ரீநிவாசர்


இராப்பத்தின் நிறை நாள் பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு அந்த வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.
இன்றைய தினம் மையார்கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும் கையர் திருமுன் நிறை பத்தான பத்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இப்பத்தால் எம்பெருமானின் களைகண் களைதல்( ஆர்த்திஹரத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே
என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே
என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.


நனிசிறந்த அறிவுபெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின

பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்

கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்


வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே
விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது. பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.


நம்மாழ்வார் மோட்சம் ( திருத்துழாயால் மூடப்பட்டிருக்கிறார் ஆழ்வார்)





சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்சோதீயோ!
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார்உயர்ந்தே
என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் இன்று ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

இந்த வருட திருவரங்கத் பகல் பத்து இராப்பத்து நிகழ்ச்சி நிரலில் இன்று திருவரங்கத்தில் தீர்த்தவாரி உற்சவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் நன்றி, வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் , திருமயிலை.

No comments:

More than a Blog Aggregator