Saturday, December 22, 2007

இராப் பத்து மூன்றாம் நாள்

சத்ய நாராயணர் காளிங்க நர்த்தன திருக்கோலம்



தென்குருகூர் ஏறு சடகோபர்




திருவாய்மொழித் திருநாளின் மூன்றாம் இரவு பெருமாள் திருமுன் நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் மூன்றாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த மூன்றாம் பத்தில் எம்பெருமானது பரவியிருத்தல் (வ்யாபகம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான் என்றெல்லாம் பெருமாளை பாடிப்ப்ரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதை சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.





குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலமளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம்விணையோயுமே. என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் ’ஸ்ரீ சடகோபம்’ என்றோ ’ஸ்ரீ சடாரி’ என்று வடமொழியிலோ வழங்கப்படுகின்றது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை


நலந் தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்


வலந் தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உன்


கலந் தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே!





என்று எம்பெருமாளின் அடியார்களின் பெருமையை இந்த பத்தின் ஒரு பாசுரத்தால் விளக்குகிறார் வகுளாபரணர்.





திருவாய்மொழித் திருநாளின் போது திருவரங்கத்தில் நம் பெருமாள் மாலை மூன்று மணியளவில் மூலஸ்தானம் விட்டு புறப்பட்டு திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்து அரையர் சேவை கண்டருளி இரவு வீணை இசையுடன் மூலஸ்தானம் எழுந்தருளுகின்றார்.





திருவல்லிக்கேணியிலே மாலை ஆறு மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு பார்த்தசாரதிப் பெருமாள் பெரிய வீதிப் புறப்பாடு கண்டருளி திருவாய்மொழி மண்டபம் எழுந்தருளி அருளப்பாடு ஆகி திருவாய் மொழி சேவை சாற்றுமுறை கேட்டருளுகின்றார்.





திருமயிலையிலே ஆதி கேசவப்பெருமாள் மாலை ஏழு மணிக்கு ரங்க மன்னார் திருக்கோலத்தில் விசேஷ புறப்பாடு கண்டருளுகின்றார்.




சத்ய நாராயணர் திருக்கோயிலில் தினமும் மாலை 6:30 மணி அளவில் நம்மாழ்வார் அடைக்கலப் ப்த்து சாற்று முறையுடன் பெருமாளை சேவித்த வாறு செல்ல பெருமாள் அவருக்கு சேவை சாதித்த வண்ணம் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி, பத்தியுலா. ராஜ நடை, சிம்ம நடை, நாக நடை முதலான நடை கண்டருளிய பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேர்ந்த பின் தினமும் நூறு திருவாய் மொழிப் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. பின் சாற்றுமுறை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்படுகின்றது. இராப்பத்தின் மூன்றாம் நாளான இன்று நம்மாழ்வார் பராங்குச நாயகியாக சேவை சாதிக்கின்றார்

No comments:

More than a Blog Aggregator