Sunday, December 9, 2007

அத்யயனோற்சவம்

அத்யயனோற்சவம்



மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அந்த ஆதி மூலனின் முன் சேவை செய்யும் உற்சவமே அத்யயனோற்சவம்.

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பெருமானால் சிறப்பிக்கப் பெற்ற் தேவர்களின் காலை நேரமான மார்கழி மாதத்தில் வைணவ திருத்தலங்களில் கொண்டாடப்படும் உற்சவமே அத்யயனோற்சவம்.

தமிழுக்கு தகமை செய்யும் விழா, இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் பெருமை சேர்க்கும் உற்சவமே அத்ய்ய்யனோற்சவம்.

முப்பத்து முக்கோடி வைகுண்ட ஏகாதசியை மையமாக கொண்டுள்ள உற்சவமே அத்யயனோற்சவம்.

சரணாகதி தத்துவத்தை தத்ரூபமாக விளக்கும் உற்சவமே அத்யயனோற்சவம்.

திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கதுஞ்சோரமே ஆள்கின்ற, அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார் (ஓதினார்), அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். முதன் முதலாக திருமங்கை மன்னரே திருவாய் மொழிப் பாசுரங்களை நம்பெருமாள் முன் சேவித்தார். அதன் பின்னர் மார்கழி மாதத்தின் வைகுண்ட ஏகாதசியின் போது நாலாயிர திவ்விய பிரபந்தமும் சாற்றுமுறை செய்யப்படலாயிற்று.


மன்னு பெரும்புகழ் மாதவன், மாமணிவண்ணன், மாய கூத்தன், மால் வண்ணன், மலர்மிசை நாயகன், மண்மகள், திருமகள், ஆய்மகள் அன்பன், இவ்வுலத்தில் உள்ளோர் எல்லாம் உய்யும் பொருட்டு வேதங்கள் மற்றும் பகவத் கீதையின் சாரங்களை பாமரரும் புரிந்து கொள்ள " கலைகளும் வேதமும் நீதி நு‘லும் கற்பமும் சொற்பொருள் தானும் நீர்மையினால் அருள் செய்தான்". அவனே ஆழ்வார்களுக்கு மயர்வற மதிநலம் அருளி தெள்ளு தமிழில் சிறந்த பாடல்களை பாடச்செய்தான். பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களே நாலாயிர திவ்ய பிரபந்தம். சந்த தமிழ் மறையாம் திவ்ய பிரபந்தம் ஓதப்படும் திருவிழாவே அத்ய்யனோற்சவம்.



பகல் பத்து என்று முதல் பத்து நாட்கள் திருமொழியும் வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், நம்மாவார் மோக்க்ஷமும் இயற்பா சாற்றுமுறையும் சேவிக்கப்படும் உற்சவமே அத்யயனோற்சவம்.

நாளை முதல் இந்த வருடத்திய அத்யயனோற்சவம் துவங்குகின்றது. இனி வரும் நாட்களுக்கு அந்த உற்சவத்தை பற்றி காண்போம்.

No comments:

More than a Blog Aggregator