Friday, December 21, 2007

இராப் பத்து இரண்டாம் நாள்

சத்ய நாராயணப் பெருமாள் பத்ரி நாராயணர் திருக்கோலம்


வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்

நம்மாழ்வார்



திருவாய்மொழித் திருநாளின் பத்து நாட்களிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து ஒரு பத்து(நூறு) பாசுரங்கள் எம்பெருமான் முன் சேவிக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் நம்மாழ்வாருக்காக பரமபத வாசல் சேவை சாதிக்கின்றார். அடுத்த பத்து நாட்கள் ஆழ்வார் ஒவ்வொரு பத்தாக பாசுரம் சேவித்து பின் பத்தாம் நாள் மோட்சம் அடைவதாக ஐதீகம்.

காரியாருக்கும் உடைய நங்காயாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

கழிமின் தொண்டீர்காள்! கழித்து

தொழுமின் அவனைத் தொழுதால்

வழிநின்ற வில்விணை மாள்வித்து

அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.

ஆடி ஆடி அகங்கரைந்து இசை

பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்

நாடி நாடி நரசிங்கா! என்று

வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடிய நம்மாழ்வாரின் வைகுண்ட ஏகாதசியன்று சேவிக்கப்படும் முதல் பத்தால் எம்பிரானது மேன்மையையும்(பரத்வம்), திருவாய் மொழித் திருநாளின் இரண்டாம் நாளான இன்று சேவிக்கப்படும் இரண்டாம் பத்தால் எம்பெருமானது படைத்தலும்(காரணத்வம்) கூறப்படுகின்றது என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் முதல் அதிகாலை சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் உபவாசம் இருக்கின்றனர். வெறும் துளசி தீர்த்தம் மட்டும் பருகி( முடியாதவ்ர்கள் சிறிது அவல் உட்கொண்டு) , எப்பொழுதும் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் ஓதி , இரவு முழுவதும் உறங்காதிருந்து பின் துவாதசி காலையில் துளசி தீர்த்தம் பருகி பாரணையுடன் விரதத்தை முடிக்கின்றனர். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷ இராஜாவை துர்வாசர் சாபத்திலிருந்து பெருமாள் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பிய கதையும் உண்டு.

துவாதசி அன்று காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கம்பளி அங்கியில் சேவை சாதிக்கின்றார். ஏகாதசியன்று பெருமாள் புஷ்பாங்கி சேவை சாதிக்கின்றார்.

1 comment:

Sethu Subramanian said...

The last line in the pAsuram should read as:
vADi vADum ivvAL nudhalE

More than a Blog Aggregator