Tuesday, December 18, 2007

பகல் பத்து ஒன்பதாம் நாள்

சத்ய நாராயணப் பெருமாள் பத்ரி நாராயணர் திருக்கோலம்



துவாதச நாமக் காப்புடன் நம் கலியன்
( ஆழ்வார் ஆராதித்த பெருமாளுடன்)



திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் நாள் பெரிய திருமொழியின் மூன்று பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன. ஏழாம், எட்டாம், மற்றும் ஒன்பதாம் பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன.

முதன் முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கனின் அநுமதியோடு திருக்குருகூரில் நம்மாழ்வாரின் அருச்சையிலுள்ள மூர்த்தியைத் திருவரங்கத்துக்கெழுந்தருளச் செய்து வேதங்களுக்கிணையாக நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரங்கனின் திருமுன்பேயிசைத்து அத்தியயனத் திருவிழாவை நடத்தியருளினார்.

கலிகாலத்தின் கொடுமையை அடியார்க்கடிமையாலொழித்தவரென்பது பற்றி திருமங்கையாழ்வார் 'கலிகன்றி' என்று பெயர் பெற்றார்.

திருநறையூர் நம்பியிடம் திருவாழி திருச்சங்கிலச்சினையும் , திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்ற மங்கை மன்னர் திருநறையூர் நம்பியையும், திருகண்ணபுரத்தன்னானையும் நூறு நூறு பாசுரங்களினால், மங்களாசாசனம் செய்துள்ளார். இன்றைய தினம் இந்த இரண்டு திவ்ய தேசங்களின் பாசுரங்களும், மற்றும் திருச்சேறை, திருவழுந்தூர், திருச்சிறுபுலியூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி,திருநாகை ஆகிய சோழ நாட்டுத்திருப்பதிகள், திருப்புலாணி, திருக்குறுங்குடி, திருவல்லவாழ், திருமாலிருசோலை, திருக்கோட்டியூர் ஆகிய பாண்டிய நாட்டுத்திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

இன்று திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாள் முரளிக் கண்ணன் திருக்கோலத்திலும், திருமயிலையில் ஆதிகேசவப்பெருமாள் கீதோபதேச திருக்கோலத்திலும் சேவை சாதித்து திருமொழி பாசுரங்களை கேட்டருளுகின்றனர்.

நாளை பத்தாம் பத்தின் நிறை நாள் நாச்சியார் கோலத்தில் பெருமாளை சேவித்து மகிழ்வோம்.

No comments:

More than a Blog Aggregator