Tuesday, December 25, 2007

இராப் பத்து ஏழாம் நாள் (கைத்தல சேவை)

ஸ்ரீ:


நம்பெருமாள் கைத்தல சேவை


திருவாய்மொழித் திருநாளின் ஏழாம் இரவு அலை கடலைக் கடைந்தவாரவமுதை, அமுதே! அப்பனே! என்னையாள்வானே! கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே! ஏற்றரும் வைகுந்தத்தை அருள்வானே! புக்கரியுருவாய் அவுணலுடலம் கீண்டுகந்த சக்கரச் செல்வனே! அல்லிதுழாயலங்கல் மார்ப! என்னச்சுதனே! என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " ஏழாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது திறன் (சக்தத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

பகவானுக்கும்( பரமாத்விற்கும்) பாகவதனுக்கும் ( ஜீவாத்மாக்கும் ) உள்ள உறவு பல வகைப்படும். பெரியாழ்வார், குலசேகரப் பெருமாள் முதலியோர் பெருமாளை தன் மகனாக பாவித்து வாத்சல்ய பாவத்தில் பாடினர். தோழனாக விளங்கியவன் அருச்சுனன். பெருமாள் ஒருவரே நாயகன் மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் நாயகிகள் என்பதால் தன்னை நாயகியாக பாவித்து பாசுரம் பாடியவர்கள் திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும் ஆவர். இதில் வகுளாபரணர் தனனை திருமாலை எண்ணி எண்ணி மாலும் பராங்குச நாயகியாய் யஜுர் வேதத்திற்க்கு இணையான திருவிருத்தமும், சாம வேதத்திற்க்கு இணையான திருவாய்மொழியும் இந்த நாயகன் நாயகி பாவத்திலான அகப் பாடல்களாகப் பாடியுள்ளார்.

ஆழியெழச் சங்கும் வில்லுமெழ திசை
வாழியெழத் தண்டும் வாளுமெழ அண்டம்
மோழையெழ முடிபாதமெழ அப்பன்
ஊழியெழ உலகம் கொண்டவாறே
என்று பாடிய நம்மாழ்வார்

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிரானே! என்று கொல்? சேர்வதந்தோ நின் திருப்பாதத்தை யான் என்று இன்று பராங்குச நாயகியாய் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளுகின்றார்.

தன் அன்பன் இவ்வாறு ஏழுந்தருளும் போது நம் பெருமாளும் அந்த அழகை ரசிக்க சிறப்பாக எழுந்தருளுகின்றார். எவ்வாறு பெருமாள் இன்று வருகிறார் தெரியுமா? கைத்தாங்கலாக, பட்டர்கள் இன்று பெருமாளை தம் கைகளிலே ஏந்தி ஏழப் பண்ணுகின்றனர். இச்சேவை கைத்தல சேவை எனப்படுகிறது. நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவிய நம் பெருமாள் அந்த சடகோபனுக்காக கைத்தல சேவை சாதித்தருளுகின்றார்.

திருவல்லிக்கேணியில் இன்று பார்த்தசாரதிப் பெருமாள் முத்தங்கி சேவை. நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலம். திருமயிலையில் ஆதி கேசவப் பெருமாள் நம்பெருமாள் திருக்கோலம் முத்தங்கி சேவை.

No comments:

More than a Blog Aggregator