மேற்கு மாம்பலம் கோதண்டராமர் வைகுந்த நாதர் திருக்கோலம்.
பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாள் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குலசேகர ஆழ்வாரின் சிறப்பு அவர் இராமன் மேல் கொண்ட பக்தி . பெருமாள் என்று அழைக்கப்படும் இராமபிரானின் மேல் உணர்ச்சி உந்திய அன்புப் பேராறு பூண்டமையின் ஆழ்வாரை "குல சேகர பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர். இவர் இயற்றிய பாசுரங்கள் "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படலாயின.
பெரியாழ்வார் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியது போல குலசேகராழ்வார்
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்கன்னிமாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ. இராமனுக்கு தாலாட்டுப் பாடியவர்.
இந்த கலி காலத்தில் நல்லவர்கள் தான் மிகவும் துன்பப்படுகிறார்கள், எவ்வளவுக்கு எவ்வளவு கொடிய பாவங்களை செய்கின்றார்களோ அவர்கள் எல்லாரும் மிகவும் நன்றாக இருக்கின்றார்கள் என்று பொதுவாக தோன்றுகிறது அது உண்மையள்ள என்பதற்கு குலசேகராழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். தமிழ் படித்த அனைவரும் பள்ளியில் சிறு வயதில் இந்த பாசுரத்தை படித்திருப்போம்.
வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே.
மருத்துவர் நம் நோய் தீர கத்தியால் அறுத்து சுடுவது போல மாயையால் நமக்கு துன்பன் அளிப்பவரும் பெருமாளே. நமது கர்ம விணைகள் தீர்ந்தால் தான் அவரது திருவடியை அடையலாம் ஆகவே துன்பங்கள் எல்லாம் நம்மை அவரிடம் அழைத்துச் செல்லும் படிகள். ஒன்றே ஒன்று வேண்டும் அது தான் பூரண சரணாகதி, மற்ற எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்.
வைணவத்திருக்கோவில்களில் கர்ப்பகிரகத்தின் திருப்படி ( உள் வாயிற் படி) "குலசேகராழ்வார் திருப்படி " என்று அழைக்கப்படுகின்றது அதற்கு குலசேகரர் பாடிய பாசுரத்தில் என்ன என்ன கூறுகின்றார் பாருங்கள்
அரசராக இருந்து மண்ணாண்ட அவர் வேண்டாதது:
ஊனேறு செல்வத்து உடற்பிறவியான் வேன்டேன்
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
மின்னனையநுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்அன்னவர்தம்பாடலொடும் ஆடலவையாதரியேன்
மன்னவர்தம் கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
ஆனால் அவர் வேண்டுவது
வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே - பறவையாய்
பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துசெண்பகமாய் நிற்கும் தவமுடையெனாவேனே - மலராய்/மரமாய்
எம்பெருமானீசன் எழில் வேங்கடமலைமேல்தம்பகமாய்நிற்கும் திருவிடையெனாவேனே - புதராய்
தென்னென வண்டினங்கள்பண்பாடும் ங்கடத்துள்அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவேனே -சிகரமாய்
திருவேங்கட மலையில் கானாறாய்ப்பாயும் கருத்துடையயெனாவேனே - ஆறாய்
திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையெனாவேனே - பாதையாய்
நெடியானே! வேங்கடவா! நின் கோவில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
வேங்கடம் என்பது வேம் - பாவம் + கடம் - எரித்தல் அதாவது பாவங்களை அழிக்கும் மலை. என்றும் வேம் - அழியாத + கடம் - ஐஸ்வர்யம் , அதாவது அழியாத ஐஸ்வர்யம் அளிக்கும் மலை என்றும் பொருள் படும். அந்த திருவேங்கடமலையில் அனைவரும் ஏறிச்சென்று எம்பெருமானை வழிபடும் படியாக கிடந்து பெருமாளின் பவள வாயைக் காண வேண்டும் என்று பாடியதால் தான் கர்ப்பகிரகத்து படி குலசேகராழ்வார் படி என்று அழைக்கப்படுகின்றது.
திருவல்லிக்கேணியில் இன்று சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலம். மயிலையில் ஸ்ரீ இராமவதாரம்.
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
1 comment:
அருமை. மிக அழகாக பெருமாள் திருமொழியிலிருந்து அருமையான பாசுரங்களை எடுத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
Post a Comment